×

தேவர் தங்கக்கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க இபிஎஸ் தரப்பு மனு: ஓபிஎஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவு

மதுரை: தேவரின் தங்கக்கவசத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், ஓபிஎஸ் தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு 13 கிலோ தங்கக்கவசத்தை கடந்த 2014ல் வழங்கினார். இந்த தங்கக்கவசம் மதுரை அண்ணாநகர் வங்கியில் அதிமுக பொருளாளர் மற்றும் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் பெயரில் கூட்டாக லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது.

குருபூஜையின் போது 3 நாளுக்கு முன் வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு அணிவித்து பின் மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பது வழக்கம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு தங்கக்கவசத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிமுக பொருளாளரான எனக்கே தங்கக்கவசத்தை பெறுவதற்கான அதிகாரம் உள்ளது. ஆனால், எங்களிடம் தங்கக்கவசத்தை ஒப்படைக்க வங்கி தரப்பில் மறுக்கின்றனர். எனவே, தங்கக்கவசத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும், வங்கிக்கணக்கை அதிமுக சார்பாக பயன்படுத்தும் அதிகாரத்தை வழங்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, ‘‘நினைவிட காப்பாளர் முன்னிலையில் மதுரை டிஆர்ஓ கையெழுத்திட்டு தங்கக்கவசத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அவரிடம் இருந்து ராமநாதபுரம் டிஆர்ஓ கவசத்தை பெற்றுக் கொண்டு, திரும்ப கொண்டு வர வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட துணை மனுவில், ‘‘கட்சியின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதனால், ஓபிஎஸ் தரப்பு எந்த உரிமையும் கோர முடியாது. எனவே, மதுரை வங்கி லாக்கரில் உள்ள தங்கக்கவசத்தை என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடவேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை அக். 10க்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post தேவர் தங்கக்கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க இபிஎஸ் தரப்பு மனு: ஓபிஎஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : EPS ,Dewar ,OPS ,Madurai ,Devar ,ICourt Branch ,
× RELATED நாகை எம்.பி. செல்வராஜ்...